பிறப்புறுப்பில் 2 கிலோ கட்டியுடன் மயங்கி கிடந்தவர் மீட்கப்பட்டு மருத்துமவனையில் சேர்ப்பு


மதுரை: பிறப்புறுப்பில் இரண்டு கிலோ கட்டியுடன் துடித்துக் கொண்டே ரோட்டில் மயங்கி உயிருக்கு போராடியவரை ‘ரெட் கிராஸ்’ அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் சாலையில் பிறப்புறுப்பில் இரண்டு கிலோ கட்டியுடன் நடக்க முடியாமல் சுமார் 45 வயது மதிக்கதக்க நபர் சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். தகவலறிந்த இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் செயலாளர் ராஜ்குமார், உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் நேரில் சென்று அந்த நபருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த நபரை பற்றி விசாரித்தனர்.

அவர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்றும் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் பிறப்புறுப்பில் ஏற்பட்ட இரண்டு கிலோ-வுக்கும் அதிகமான எடையுடன் கூடிய கட்டியுடன் நடக்க முடியாமல் ஒவ்வொரு ஊராக சுற்றித்திரிவதும் தெரியவந்தது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் தற்போது நடக்க இயலாமல் மயக்கமடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரெட் கிராஸ் அமைப்பினர் உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் அவரை போலீஸார் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஆதரவற்றோர் சிகிச்சை வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் கிடைத்ததும் ஓடோடி வந்து இதுபோன்ற ஆதரவற்ற ஜீவன்களுக்கு உதவும் ரெட் கிராஸ் அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டினர்.

x