நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கீழத்தெரு சேர்ந்தவர் சகாய பெல்லார்மின் (55). இவரது நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் மீன்பிடித்துவிட்டு இன்று காலையில் கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் எழுந்த பேரலையில் சிக்கி இவர்களின் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 6 மீனவர்களும் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு தத்தளித்தனர். கரையை நோக்கி காற்றுடன் நீரோட்டம் ஏற்பட்டதால் கவிழ்ந்த படகு கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இதை கடற்கரையில் நின்று கொண்டிருந்த பிற மீனவர்கள் பார்த்துவிட்டு கடலில் நீந்திச் சென்று கவிழ்ந்த படகையும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர். கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட 6 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பினர். அதே நேரம் படகில் இருந்த மீன்களும், வலை உட்பட மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின. இதுகுறித்து கன்னியாகுமரி மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.