சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத் துறைகள் மூலம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வானிலை ஆய்வு மையம் நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்திருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுப்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் இன்று வனத்துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி தலைமையில், எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி அன்னியூர் சிவா ஆகியோர் முன்னிலையில், மரக்காணம், பனிச்சமேடு புயல் பாதுகாப்பு மையம், கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: "மரக்காணம் திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு அரிசி, பிரட் மற்றும் பால் பாக்கெட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. பூமிஸ்வரர் கோயில் அருகில் நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்யப்பட்டது. பஜனைக் கோயில் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை கேட்டறியப்பட்டது.

மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவர்களிடம் மழைக்கால நோய்த் தடுப்பு மருந்துகள், பாம்பு, பூச்சிக் கடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது. மழைக்காலம் என்பதால் காய்ச்சல் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

மரக்காணத்தில் 9 பேரிடர் பாதுகாப்பு முகாம்கள், வானூரில் 3 பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் என மொத்தம் 12 பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சின்னமுதலியார்சாவடி மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்கப்படும்.

கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார்சாவடி மீனவ மக்களிடம் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்கிட அறிவுறுத்தப்பட்டது" என்று அமைச்சர் கூறினார். முன்னதாக, மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை புரிந்து, பேரிடர் மீட்பு பணிகளுக்கான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதை அமைச்சர் பொன்முடி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பனிச்சமேடு புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்கள் தங்கவைப்பதற்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

x