புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும் - எதிர்க்கட்சித் தலைவர் சிவா நம்பிக்கை


புதுச்சேரி: பெண்கள் விரும்பும் தமிழக திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியிலும் நிச்சயம் அமையும் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் திமுக மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உருளையன்பேட்டை தொகுதியில் மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் அண்ணா சாலையில் உள்ள தொகுதி திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளரும், தலைமைப் பொதுக் குழு உறுப்பினருமான கோபால் தலைமை தாங்கினார்.

தொகுதிச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, திமுக மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி பேசியதாவது: "புதுச்சேரியில் அதிகமான பெண் வாக்காளர்கள் இருந்த போதிலும், ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவமும், முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிபுரிந்துவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்காக முத்தாய்ப்பான பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

மகளிருக்கான இலவச விடியல் பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ரேஷன் கடைகளில் மலிவு விலை மளிகை பொருட்கள் என பல திட்டங்களால் தமிழக பெண்கள் தன்னிகரற்ற வளர்ச்சியைப் பெற்று வருகிறார்கள். தமிழகத்தை போலவே புதுச்சேரி பெண்களும் விடியலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்து காட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மகளிர் விரும்பும் திராவிட மாடல் திமுக ஆட்சி புதுச்சேரியிலும் நிச்சயம் அமையும்" என்று சிவா கூறினார்.

x