மீட்புப் பணிகளுக்காக ‘வாட்ஸ் ஆப்’ குழு - கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். அருகில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர். படம்:ஜெ.மனோகரன்.

கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலையில் அனைத்து அரசு அதிகாரிகள் கொண்ட ‘வாட்ஸ்-ஆப்’ குழு அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவையில் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளாக ஆறு இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: "பருவமழையை எதிர்கொள்ள தமிழக முதல்வர் துறை ரீதியாக ஆய்வு கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு மாவட்ட அளவிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் ஆய்வுக் கூட்டங்ளை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்த போதும் மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் 2 மணி நேரத்தில் 6 முதல் அல்லது 8 செ.மீ மழை பெய்த போதும், விரைவில் இயல்பு நிலை திரும்பியது. பருவமழையை எதிர்கொள்ள முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் சில பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளாக கோவையில் ஆறு இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துரிதமாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். மின்விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. உயிர் இழப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகள் கொண்ட ‘வாட்ஸ் ஆப்’ குழு ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

திமுக எம்எல்ஏ-க்கள் ஓருவர்கூட இல்லாத நிலையிலும் தமிழக முதல்வர் அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாவட்டமாக கோவை உள்ளது. கோவை மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

x