கரூர்: வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலையை பயன்படுத்த முடியாத வகையில் இரு புறங்களிலும் பள்ளம் பறித்து அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
கரூர் அருகேயுள்ள காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி சின்னவடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெண்ணெய்மலை கோயில் நிலங்கள் மீட்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அரசு எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதை அடுத்து கடந்த செப். 18ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெண்ணெய்மலை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் கோட்டாட்சியர் முகமதுபைசல் தலைமையில் செப்.19ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து வெண்ணெய்மலை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வருவாய்த்துறை உதவி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணிகள் மீண்டும் அக்.8ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகாரிகளிடம் மதுபோதையில் வாக்குவாதம் செய்த அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (41) மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனால் போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அளவீடு பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் அக்.9ம் தேதி அளவீடு பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர்.
1 பெண் உள்ளிட்ட 12 பேரை வெங்கமேடு போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பின் சிறிது நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வருவாய்த் துறை துணையுடன் போலீஸார் பாதுகாப்புடன் வெண்ணெய்மலை, சின்னவடுகப்பட்டி பகுதிகளில் உள்ள சுமார் 20 காலி இடங்களில், இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது. அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.
சாலை பறிப்பு: ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவடுகப்பட்டியில் கோயில் நிலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள், குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தி வந்தனர். கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவின்பேரில் அமீனாக்கள் முன்னிலையில் சாலையின் இறபுறங்களிலும் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. அறிவிப்பு பதாகை வைத்த இடங்கள், சாலை பறிக்கப்பட்ட பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.