கடலூரில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் தகவல்


கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொது விநியோகத் திட்ட இயக்குநர் மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பருவமழை காலங்களில் பெய்யக் கூடிய கனமழையினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மாவட்டத்தில் கடலோர வட்டாரங்கள் 4, கடலோர வட்டங்கள் 4, கடலோர மீனவ கிராமங்கள் 49 உள்ளடக்கிய 57.5 கி.மீ நீளமுடைய கடற்கரை உள்ளது.

மொத்தம் 239 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதில் 22 இடங்கள் மிக அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 39 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 20 இடங்கள் மிதமாக பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 158 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 28 புயல் பாதுகாப்பு மையங்கள் 8,400 நபர்கள் தங்கும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் ) 15,800 நபர்களும், 191 தற்காலிக தங்கும் இடங்களில் 1,54,875 நபர்களும் தங்கும் அளவிற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 56 இடங்களில் கால்நடைகள் தங்குமிடங்கள் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 13 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 57 அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா இராஜேந்திரன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச் செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் சரண்யா மாநகராட்சி ஆணையாளர் அனு உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

x