கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடுகளால் தொற்றுநோய் பரவல் அதிகரிப்பு: புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு 


புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் | கோப்புப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடுகளால் தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ளது என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி மக்கள் இலவச அரிசிக்கான பணம் போதுமானதாக இல்லை எனவும், பணத்துக்கு பதில் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இலவச அரிசி வழங்கப்படவில்லை.

இலவச அரிசி வழங்கும் விஷயத்தில், வாக்களித்த மக்களை வஞ்சித்து ஏமாற்றும் விதத்தில் அரசின் செயல்பாடு உள்ளது. ஆகவே ஆட்சியில் உள்ளவர்கள் இலவச அரிசி வழங்கும் திட்டம் சம்பந்தமாக அறிக்கை வெளியிடுவதை நிறுத்துக்கொள்ள வேண்டும். இலவச அரிசி வழங்குவது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் புதுச்சேரி அரசின் கொள்கை முடிவு என்ன, பணத்துக்கு பதிலாக இலவச அரிசி மாதந்தோறும் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா, அப்படி அனுமதி அளித்திருந்தால் எந்த மாதத்தில் இருந்து இலவச அரிசி வழங்கப்படும் என ஒரு தெளிவான விளக்கத்தை வெளியிட வேண்டும்.

கடந்த வாரத்தில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் சாலைகள் நீரில் மூழ்கின. பல கடைகளில் மழை நீர் உட்புகுந்தது. இதையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மழைநீர் வடிகால்களை அரசு மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

அனைத்து பகுதிகளிலும் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தால் தண்ணீர் எப்படி வெளியேறும். மக்களுக்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் என்னதான் இவர்கள் செய்துள்ளனர்? முதல்வர் தலைமையில் ஒரு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கூட்டம் என போட்டோ ஷூட் நடத்தும் வேலையைத் தான் செய்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி முழுவதும் கொசு உற்பத்தி மற்றும் சுகாதார சீர்கேட்டால் டெங்கு, மலேரியா, விஷக் காய்ச்சல் உள்ளிட்ட பருவகால தொற்று நோய்கள் பரவி வருகிறது. வம்பாகீரபாளையம் மீனவர் குடியிருப்பு பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் கொசு உற்பத்தி அதிகமாகிறது.

கொசு உற்பத்தியை தடுக்க எந்த மருந்தும் அரசு தெளிப்பதில்லை. மாலை நேரத்தில் கொசு ஒழிப்பு புகை அடிப்பதைக்கூட நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. இது சம்பந்தமாக பலமுறை எடுத்துக் கூறியும், ஆளும் அரசு கண்டுகொள்வதே இல்லை.

ஒரே ஒரு நாள் துணைநிலை ஆளுநர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் கஷ்டம் தெரியவரும். புதுச்சேரி நகராட்சி தற்காலிக பேருந்து நிலையம் ஏஎஃப்டி திடலில் அமைந்துள்ளது. ஆனால், அங்கு சேறும் சகதியுமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் அந்த இடத்தில் சுமார் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைத்திருக்கலாம்.

அதைச் செய்யாத நகராட்சி ஆணையர், தற்காலிக பேருந்து நிலையம் ஏஎஃப்டி திடலுக்கு வருவதற்கு முன்னால் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து நீதிமன்றம் வரை விடப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தனக்கு வேண்டியவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். பொதுப்பணித்துறைக்கும் இவரே முதன்மை பொறியாளரா என்று தெரியவில்லை.'' இவ்வாறு அவர் கூறினார்.

x