சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதி குடியிருப்புகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 209 திட்டப் பகுதிகளில் 1.20 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்புதாரர்களின் வசதிக்காக வாரியத் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் 044 – 29862104 என்ற தொலைபேசி வசதியுடன் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப்பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஏதுவாக பம்ப்செட்டுகள், மண் நிரப்பும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மின்தூக்கி வசதிகள் உள்ள திட்டப்பகுதிகளில் போதுமான டீசல் கொள்முதல் செய்யப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாரியத்தால் ஏற்கெனவே எச்சரிக்கை செய்யப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் - கண்ணகி நகர் திட்டப்பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பருவ மழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள 10 எச்பி திறன் கொண்ட 10 மோட்டார்கள், 125 கிலோ வாட் திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் மற்றும் 3 மண் நிரப்பும் இயந்திரங்கள் (JCB) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மழைக்குப் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக வாரியம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும். மேலும், பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.