சென்னை: சென்னையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர், “ இன்று தென் மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து அந்த பகுதியில் நிலவுகிறது.
இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். விழுப்புரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்னாமலை, புதுச்சேரி, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருப்பத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அக்.15-ம் தேதி தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-ம் தேதி வரை தொடரும். வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே அதி கனமழை பொழிவதால் வரும் நாட்களிலும் தீவிர மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.