ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்க உள்ள நிலையில், பண்டிகை காலம் என்பதால் பொங்கல் பண்டிகை வரை கடைகளை இடிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மைய பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பழுதடைந்ததாலும், இடநெருக்கடி காரணமாகவும் சிவகாசி சாலையில் ரூ.16 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்து உள்ளதால், அதை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த வணிக வளாகத்தில் தற்போதுள்ள கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் ரவி கண்ணன் தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ், மேலாளர் பாபு முன்னிலை வகித்தனர். அதில் பேசிய வியாபாரிகள், ''பண்டிகை கால வியாபாரத்திற்காக கடன் பெற்று முதலீடு செய்துள்ளோம். அதனால் பொங்கல் பண்டிகை முடியும் வரை கடைகளை இடிக்கும் முடிவை தள்ளி வைக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் ரவி கண்ணன், ''தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 15-ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்குரிய நிதி என்பதால் டிசம்பர் மாதத்திற்குள் பழைய கட்டிடத்தை இடித்து பணிகளை தொடங்கினால் தான் அரசிடம் இருந்து நிதி வரும். பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால், நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டு, பணிகள் நிறைவடைவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே , யார் பெயரில் ஒப்பந்தம் உள்ளதோ அவர்களுக்கே கடை ஒதுக்கீடு செய்யப்படும். வாடகை உயர்த்தப்படாது. கடைகள் இடிக்கப்பட்ட காலத்தில் வியாபாரிகள் வாடகை செலுத்த வேண்டாம். 6 மாதத்திற்குள் பணிகளை முடித்து கடைகள் ஒப்படைக்கப்படும்'' என தெரிவித்தார்.