சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்து தோடுகளை கொள்ளையடித்துச் சென்றனர். தொடர்ந்து 2வது முறையாக ஒரே வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முட்டாக்கட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னையா (58). இவரது மனைவி சரஸ்வதி (53). இருவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி இரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 3 பேர் வீட்டிற்குள் நுழைந்து கணவன், மனைவி இருவரையும் கட்டிவைத்து விட்டு 10 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாரிடம் புகாரளித்தும் இதுவரை கொள்ளையர்களைப் பிடிக்கவில்லை.
இந்நிலையில், அக்.12ம் தேதி அதிகாலை சின்னையா, சரஸ்வதி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த இருவர் வீட்டின் உள்ளே நுழைந்தனர். பின்னர், சரஸ்வதியின் 2 காதுகளையும் அரிவாளால் அறுத்த அவர்கள், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தோடுகளை கொள்ளையடித்துச் சென்றனர். சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தவர்கள், காயமடைந்த சரஸ்வதியை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து ஒரே வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் அடுத்தடுத்து இரண்டு முறை கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.