கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க ரயில்வே டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை


சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில்மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீஹார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். இந்தகோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுபோல, ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்திவந்தனர்.

இதற்கிடையில், கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரிமுனி பிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 4 பிரிவுகளில் ரயில்வே போலீஸார் போலீஸார் வழக்கு பதிந்தனர். அதாவது, காயம் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், கவனக்குறைவான செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் சம்மன் கொடுத்து விசாரிக்கவும் ரயில்வே போலீஸார் திட்டமிட்டுள்ளனனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக விசாரிக்க தமிழக ரயில்வே காவல்துறை டிஎஸ்பி-கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில், சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி கர்ணன், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ், சேலம் ரயில்வே டிஎஸ்பி பெரியசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனிப்படை குழுவிலும் 8 போலீஸார் உள்ளனர். இவர்கள் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், அங்கு கிடைத்த ஆதாரங்கள், அன்றைய நாளில் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதுபோல, விபத்து தொடர்பாக ஏதாவது ஆதாரங்கள் மற்றும் கருத்துகளை ரயில்வே போலீஸாரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும், ரகசியமாக வைக்கப்படும் என்றும் ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆணையர் 2 நாள் விசாரணை: ரயில் விபத்து தொடர்பான விசாரணையை ரயில்வே தென்மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி கடந்த சனிக்கிழமையே தொடங்கிய நிலையில், சென்னை பார்க் டவுனில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.16, 17) விசாரணை நடத்தவுள்ளார். இதில் விபத்து தொடர்பாக ரயில்வே பணியாளர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளார். மேலும், விபத்து தொடர்பான தகவல்களை பொதுமக்களும் அவரிடம் தெரிவிக்கலாம்.ஏதேனும் ஆதாரம் இருந்தாலும் கொடுக்கலாம் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x