‘தனியாருக்கு பாண்லே பார்லர்கள்... கொல்லைப்புறமாக புதிய ஊழியர்கள் நியமனம்’ - ஏஐடியூசி சாடல்


புதுச்சேரி: தனியாருக்கு பாண்லே பார்லர்கள் தருவதையும், கொல்லைப்புறமாக புதிய ஊழியர்கள் நியமிப்பதால் நஷ்டத்துக்கு பாண்லே செல்லும் என்பதால் இவற்றை கைவிட ஏஐடியூசி கோரியுள்ளது.

தமிழகத்தில் ஆவின் போல் புதுச்சேரியில் பாண்லே நிறுவனம் செயல்படுகிறது. இடையில் சில ஆண்டுகள் இந்நிறுவனம் நிர்வாக சீர்கேடு காரணமாக நஷ்டத்தில் இயங்கியது. தற்பொழுது இதிலிருந்து மீண்டு நஷ்டமும் இல்லை, லாபமும் இல்லை என்ற நிலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பால், மற்றும் பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், மோர், பாதாம் பால், தயிர், போன்ற பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது,

இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு 60-க்கும் மேற்பட்ட பார்லர்களும், 200-க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாண்லே நிர்வாகம் விற்பனைக்காக கொள்முதல் செய்யும் பாலில் 80 சதமான பாலை முகவர்கள் மூலமாக விற்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பாண்லே நிர்வாகம் நடத்தி வந்த சில பார்லர்கள் செயல்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிறுவனம் நடத்தி வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பார்லர்களை தனியாருக்கு தரப்பட்டுள்ளது.

இதுபற்றி ஏஐடியூசி மாநில பொதுச்செயலர் சேது செல்வம் கூறியதாவது, "பாண்லே நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் 650 பேரும், தினக்கூலி ஊழியர்கள் 60 பேரும், தொகுப்பூதியம் பெறுபவர்கள் 200 பேரும் மொத்தத்தில் 910 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் ஆய்வகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவு, சொசைட்டி மூலமாக வரக்கூடிய பாலை ஆய்வு செய்யும் பணியில் 60 பேர் வேலை செய்து வருகிறார்கள். இந்த பிரிவில் 30 ஊழியர்கள் வேலை செய்தால் போதும் என்ற நிலையில் கூடுதலாக இந்த பிரிவில் பணி அமர்த்தப்பட்டுள்ளது.

மார்க்கெட்டிங் அலுவலகத்தில் 100 பேர் இருந்து வருகிறார்கள். இந்த பிரிவில் 40 ஊழியர்கள் இருந்தாலே போதும். மெயின்டனன்ஸ் பிரிவில் 50 பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு 30 பேர் இருந்தால் போதும். பாண்லே தலைமை அலுவலகத்தில் 100 பேர் உள்ளனர். இங்கு 50 ஊழியர்கள் வேலை செய்தால் போதும். மாட்டு தீவன பிரிவில் 40 பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு 20 பேர் வேலை செய்தால் போதும் என்கின்ற நிலையில் இங்கும் கூடுதலாக ஊழியர்கள் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி டெப்டேஷன் பெற்று 20 ஊழியர்கள் வெளியில் இருந்து வருகிறார்கள்.

வேலைக்கு வரும் ஊழியர்கள் வேலை செய்யாமல் அட்டனன்சில் கையெழுத்து போட்டுவிட்டு 50 பேர் சென்று விடுகிறார்கள். ஐஸ் கிரீம் மற்றும் உபப் பொருட்கள் உற்பத்தி பிரிவு, பார்லர் விற்பனை பிரிவு, டெய்ரி பால் பாக்கெட் அடுக்கும் பிரிவு, இந்த பிரிவுகளில் வேலை செய்ய 500 ஊழியர்கள் தேவை. ஆனால், இந்த பிரிவுகளில் 350 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்து வருகிறார்கள். பாண்லே நிர்வாகம் ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல் ஒட்டுமொத்தமாக இங்குள்ள ஊழியர்களை முழுமையாக பயன்படுத்தி வேலை வாங்கி விற்பனையை பெருக்கினால் நல்ல லாபத்தில் கொண்டு வர முடியும், இதை செய்யாமல் மேலும் புதிதாக 12 பேரை ஒரு சில தினங்களுக்குள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய செயல் மீண்டும் நஷ்டத்திற்கு கொண்டு போய் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும், பாண்லே நிர்வாகம், தேவைக்கு அதிகமாக முதல்வரின் உத்தரவின் பேரில், கொல்லைப் புறமாக வேலைக்கு அமர்த்துவதை கைவிட வேண்டும், அதேபோல் புதிய பார்லர்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிட்டு பாண்லே நிர்வாகமே நடத்திட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

x