நிலச்சரிவு மீட்புப் பணிகளை அறிய வயநாடு செல்கிறது அதிகாரிகள் குழு: நீலகிரி ஆட்சியர் தகவல்


உதகை: நிலச்சரிவு மீட்புப் பணிகள் குறித்து அறிய நீலகிரி மாவட்ட அதிகாரிகள் குழு வயநாடு செல்வதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து அறிய அனைத்துத் துறை அதிகாரிகள் கொண்ட குழு கேரள மாநிலம் வயநாடு சென்று, அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொறுப்பு அமைச்சர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். பால், உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தென்மேற்கு பருவ மழை காலத்தில் உதகையில் முகாமிட்டிருந்தனர். தற்போது கோவை சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் உதகைக்கு வருவார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகளில் 42 மண்டலக் குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதில் மேலும் 40 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 450 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை இரவு நேரங்களில் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும், தீயணைப்புத் துறையினர் மீட்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் குறித்து அறிய அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு கேரள மாநிலம் வயநாடு சென்று, அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிய உள்ளனர். அது இங்கு நிலச்சரிவு ஏற்பட்டால், அவர்கள் துரிதமாக செயல்பட ஏதுவாக இருக்கும். மேலும் மழைநீர் செல்ல ஏதுவாக அனைத்து மழை நீர் கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளன. பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன" என்று ஆட்சியர் கூறினார்.

x