தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை: தோவாளை பெரியகுளம் கால்வாய்க்குள் அமர்ந்து ஊராட்சி தலைவர் தர்ணா


தோவாளையில் பெரியகுளம் கால்வாய்க்குள் அமர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடத்திய தோவாளை ஊராட்சி தலைவர், மற்றும் கவுன்சிலர்கள்.

நாகர்கோவில்: தோவாளை பெரியகுளத்தில் சேதமான தடுப்புச் சுவரை சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கால்வாய்க்குள் அமர்ந்து இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் பெரியகுளம் மதகு அருகே உள்ள தடுப்புச் சுவர்கள் 2021ம் ஆண்டு பெய்த கனமழையில் உடைந்து சேதமடைந்தன. அதை இதுவரை சீரமைக்காததால் தொடர் மழையால் தோவாளை ஊருக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தடுப்புச் சுவரை சீர் செய்ய வேண்டும் என பொதுப்பணித் துறையை வலியுறுத்தி தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரியகுளம் கால்வாயின் உள்ளே அமர்ந்து உறுப்பினர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தோவாளை ஊராட்சி துணைத் தலைவர் தாணு, ஊராட்சி உறுப்பினர்கள் பெரியகுளம் கால்வாய் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள், இது உயிருக்கான போராட்டம் என கோஷம் எழுப்பினர். தகவலறிந்து அங்கு வந்த தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், மற்றும் அதிகாரிகள் ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை முதல் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்ததால் அவர்கள் தர்ணாவை கைவிட்டனர்.

x