உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக தள்ளுவண்டிகளை நிறுத்தி வைத்து வியாபாரம் செய்து வந்த சாலையோர கடைகளை இன்று போக்குவரத்துப் போலீஸார் அகற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தள்ளுவண்டிகளின் உரிமையாளர்களான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தள்ளு வண்டிகளில் பூக்கடை, பழக்கடை, மற்றும் சிற்றுண்டி கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் பகல் நேரங்களில் பேருந்து நிலையப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்க்கிறது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை போக்குவரத்துப் போலீஸார், சாலையோரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தள்ளுவண்டிக் கடைகளை வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு, எல்லை வரையறை செய்து கயிறும் கட்டியிருந்தனர்.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், சாலையோரம் தள்ளுவண்டிகளில் கடை வைத்திருந்தனர். இதனால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார், இன்று சாலையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டிகளை அகற்ற முயன்றனர். அப்போது சாலையோரம் தள்ளு வண்டிகளில் கடை வைத்திருந்த சில பெண்கள் ஆத்திரமடைந்து தள்ளுவண்டிகளை நடுரோட்டில் நிறுத்தி தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோரம் கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்தப் பெண்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.