காட்டுமன்னார்கோவில் அருகே மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது 


கைது செய்யப்பட்ட சிலம்பரசன்.

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூர் மாவட்டம் அகரத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா ஜோதி(19) என்ற பெண்ணிடம் நட்பாகி பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதனையடுத்து அபிநயா ஜோதியின் சொந்த ஊரான அகரத்த நல்லூர் கிராமத்தில் இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் தாயார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலம்பரசனை ஒழுங்காக குடும்பம் நடத்துமாறு எச்சரித்து அறிவுரை கூறி அவரது ஊருக்கு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, காட்டுமன்னார்கோவில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வாடகை வீட்டுக்கு இருவரும் குடி வந்தனர். இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார் கோயிலில் உள்ள எலெக்ட்ரிக் கடை ஒன்றில் சொற்ப வருமானத்தில் வேலை செய்து வந்துள்ளார் சிலம்பரசன். அதில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கணவன் - மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அபிநயா ஜோதி போன் பேசினால் அவர் மீது சந்தேகப்பட்டு சிலம்பரசன் அவரை அடித்தும் திட்டியும் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு சிலம்பரசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதும் கணவன் - மனைவிக்கு இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து மனைவியை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அபிநயா சம்பவ இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அபிநயா ஜோதியை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, சிலம்பரசனை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரே மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x