தமிழகத்தில் தங்கு தடையில்லாமல் சட்டவிரோத மணல் கொள்ளை: விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் தங்கு தடையில்லாமல் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளை முழுவீச்சில் அரங்கேறி வருகிறது. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு துணையாக இருப்பதால், அதிகாரிகளின் சிவப்பு கம்பள விரிப்புடன் மணல் கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் பல்வேறு ஏரி, குளம் - குட்டைகளில் வண்டல் மண் அள்ள அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

நூற்றுக்கணக்கான நீர்நிலைகளிலும் வண்டல் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. வண்டல் மண், களிமண் இல்லாத குளம், குட்டைகளிலும், விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டதுடன், சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மணல் கொள்ளை குறித்து தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களுடன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தபோதும், மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும், நீர்வளத்துறை அமைச்சரும் சட்டவிரோத மணல் திருட்டு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசாங்க ரசீதுகளை போலியாக அச்சடித்து பல ஆயிரம் லோடு மண் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அழிவு நிலைக்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறையும், அரசும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் மணல் கொள்ளையும் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அமலாக்கத் துறை தானாக முன்வந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த, இருக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x