சென்னை: கலைஞர் பூங்கா ஜிப்லைனில் எந்த பழுதும் ஏற்படவில்லை. பூங்காவுக்கு வரும் அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு, கலைஞர் பூங்காவை உருவாக்கியதால் எதிர்க்கட்சித் தலைவருக்கு கோபம்வந்துள்ளது. தோட்டக்கலை கிருஷ்ணமுர்த்தி ஆக்கிரமித்திருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்டுள்ளது. 1989-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போது 17 ஏக்கர் நிலம் சட்டப்படி மீட்கப்பட்டது.
ஆனால், பின்னர் வந்த ஜெயலலிதா ஆட்சியில், மீதிமுள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நிலத்தையொட்டி உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் ஹோட்டல் இருந்தது. ஒரு காலத்தில் சென்னையின் அடையாளமாக இருந்த அந்த ஹோட்டலில், விஐபி-க்கள் வந்து உணவருந்துவர்.
குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் ஹோட்டல் வசமிருந்த நிலத்தை திமுக அரசு மீட்டு, செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. மீதமுள்ள நிலத்துக்கு தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தனிநபர் பட்டா பெற்று, ஆக்கிரமிப்பு செய்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் சட்ட போராட்டத்தால் மீதமிருந்த 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்த இடத்தை அரசு முழுவதுமாக கையகப்படுத்தி, சீல் வைத்துள்ளது. அங்கு ரூ.46 கோடியில் உலக தரத்துடன் கலைஞர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபம் தான் பழனிசாமியிடம் வெளிப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் இல்லை. தனக்கும், சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்திருந்த அரசு நிலத்தை மீட்டு, நவீனப் பூங்காவாக மாற்றி விட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.
புவியீர்ப்பு விசை அவர் அறிக்கையில் கூறிஉள்ளதுபோல் ஜிப்லைன் பழுதடையவில்லை. அது புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இதில் பழுதடைய ஒன்றுமில்லை. இதுதொடர்பான எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமாவை.
பூங்காவுக்குள் செல்ல பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்ற சேவைகளுக்கு குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவுக்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.