உதகை / திண்டுக்கல்: நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக குன்னூர் மலைப் பாதையில் மண் சரிந்து விழுந்தது. மேலும், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகை வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நேற்று சாரல் மழையில் நனைந்தபடி தாவரவியல் பூங்காவை சுற்றிப்பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் குன்னூர் மட்டுமின்றி, அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியாறு, சேலாஸ், கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று பகலிலும் மழை தொடர்ந்தது.
இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மேலும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று, பொக்லைன் வாகன உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.
இதேபோல, குன்னூர் சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் மின் கம்பி மீது ராட்சத மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி, மரத்தை அகற்றினர். மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து, மண்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை நிலவரப்படி கிண்ணக்கொரையில் அதிகபட்சமாக 51 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, கெத்தையில் 46, பாலகொலாவில் 43, குந்தாவில் 37, பர்லியாறில் 35, கோடநாடு பகுதியில் 34, குன்னூரில் 30 மி.மீ. மழை பதிவானது.
கார் மீது விழுந்த மரம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைப் பாதைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
நேற்று முன்தினம் கொடைக்கானலில் பெய்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இடைவிடாது மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளை விட்டு வெளியே வர முடியவில்லை. சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். படகு சவாரியும் கனமழையால் நிறுத்தப்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. நேற்று மழைஓரளவு குறைந்தாலும், அவ்வப்போது பெய்தது.
2 பேர் படுகாயம்: இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் இருந்து குடும்பத்துடன் வந்த சிலர் சுற்றுலாவை முடித்துக்கொண்டு நேற்று காலை கொடைக்கானலில் இருந்து கோட்டயம் புறப்பட்டனர். காரில் 5 பேர் பயணித்தனர். இவர்களது கார் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் மூலையாறு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக மரம் ஒன்று முறிந்து கார் மீது விழுந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். பின்னால் வாகனங்களில் வந்தவர்கள், உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர்.
இதில் காரில் பயணித்த 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். அவர்கள் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து காரணமாக மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் காரின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர்.