கவரைப்பேட்டை ரயில் விபத்து; திமுக கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம்: எல்.முருகன் குற்றச்சாட்டு


மதுரை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டுப் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். மெரினாவில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் பேசினார்களா? மெரினா சம்ப
வத்தை மறைக்க, திமுக கூட்டணி ரயில் விபத்தில் நாடகமாடி வருகிறது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால், ரயில்வே நி்ர்வாகம் வேலை செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் இறங்கியுள்ளன. என்ஐஏ விசாரணையில் ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சி முழுவதும் வேதனையான ஆட்சியாக உள்ளது. பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்திவிட்டனர். எந்தப் பக்கம் திரும்பினாலும் மனமகிழ் மன்றங்கள்தான் உள்ளன. போதைப் பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி தொடர்பாக தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

x