மக்களின் உயிர், உடமையை பாதுகாப்பதே அரசின் முதல் நோக்கம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி


சென்னை: தமிழகத்தில் சில தினங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் உயிரையும், உடமையையும் பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, 1913 கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார் மீது தீர்வு காணப்பட்டதா என ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் அதிகனமழை (20 செமீ-க்கு மேல்) பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதில் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பது தான் முதல் முக்கியத்துவம். அதை மனதில் வைத்தே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கான பிரத்யேக உதவி எண்ணாக 1913 வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகம், வாட்ஸ்ஆப், ‘நம்ம சென்னை’ செயலி போன்றவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும். அரசுடன் இணைந்து செயல்பட 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 100 குதிரைத் திறன் கொண்ட 100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள எம்எல்ஏக்கள், அந்த நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வழங்குவார்கள். அரசின் டிஎன் அலர்ட் (TN ALERT) என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்து மழைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் உள்ள ஓரிரு இடங்களில், அவற்றை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடப்படாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் தெரிந்தால், அதனை மாநகராட்சிக்கு ட்விட்டர் போன்ற தளங்களில் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தரையின் மேலே கிடக்கும் அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. தாழ்வான மின்மாற்றிகள் அதிக உயரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை ஏற்று, சென்னை குடிநீர் வாரியத்தின் 356 நீரேற்று நிலையங்களும் ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், தூர்வாரும் இயந்திரங்கள், சூப்பர் சக்கர் உள்ளிட்ட 373 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பணிகளில் கூடுதலாக 83 கழிவுநீரகற்றும் வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x