இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்


சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயிலும் இங்கு உள்ளது. தினந்தோறும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலைச் சுற்றிலும் இருக்கன்குடியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கடைகள் நடத்தி வருகின்றனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியை இருக்கன்குடி ஊராட்சி மற்றும் நத்தத்துப்பட்டி ஊராட்சி என 2 ஊராட்சிகளும் உரிமை கோருவதால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நத்தத்துப்பட்டி ஊராட்சி எல்லையில் அமைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இருக்கன்குடி ஊராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறும் வழக்கு நாளை (14ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. அதோடு, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் புதிதாக கடைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இக்கடைகளை கோயில் நிர்வாகம் ஒப்பந்த முறை அறிவித்து அதன்மூலம் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நத்தத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியானதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஏற்கனவே நத்தத்துப்பட்டி இருக்கன்குடி கிராமங்களுக்கு இடையே இரு சமூகத்தினரிடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருவதாலும், இரு ஊராட்சிகளுக்கு இடையே உள்ள எல்லை பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஏற்கனவே உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கக்கோரியும் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இருக்கன்குடியில் வியாபாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் பூஜை பொருள்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், தற்காலிக செட்டுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் வெளியூர்களிலிருந்து குடும்பத்துடனும் உறவினர்களுடனும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்த பக்தர்களும் தங்குவதற்கு இடமின்றித் தவித்தனர்.

x