மத்திய அரசின் சந்தேகங்களை போக்கினால் தமிழகத்துக்கு உரிய கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்


சிவகங்கை / திருச்சி: மத்திய அரசின் சந்தேகங்களை தமிழக அரசு தீர்த்து வைத்தால், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீராங்கனை குயிலி நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் உள்ள குயிலி சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் உதயா உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான காரணம் கண்டறியப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் என்ன தவறு இருக்கிறது?

மத்திய அரசின் சந்தேகங்களை தமிழக அரசு நிவர்த்தி செய்ததும், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும். உதயநிதி துணை முதல்வரானதால், தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.அவரது குடும்பத்துக்கு கூடுதலாக ஒரு பதவி கிடைத்துள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

ராகுல்காந்தி விமர்சனம்... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்நேற்று சுவாமி தரிசனம் செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி சார்ஜா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன. ரயில்வே துறையில் பல முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என பல புதிய ரயில்கள் வந்துள்ளன. மேலும், பாதுகாப்புக்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து சிறுபிள்ளைத்தனமானது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருக்கு இது அழகல்ல.எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

x