வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி


சென்னை: தமிழகத்தில் வரும் 15, 16, 17-ல் கனமழை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வரும் 15, 16, 17-ம் தேதிகளில் கனமழை இருக்கும் என்றும், குறிப்பாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. எனவே பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் அரசால் ‘TN ALERT’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். எந்த பகுதியில் பாதிப்பு என்று தெரிய வருகிறதோ, அங்கு அவர்களை அனுப்பி வைக்க இருக்கிறோம்.

பேரிடர் காலங்களில் உணவு,பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மழை பெய்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில் உதவுவதற்காக தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் பிரச்சினைகளை தெரிவித்தால், எந்த துறை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த துறைக்கு அது தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலஅவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்களும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

கடந்த முறை வானிலை ஆய்வுமையம் எதிர்பாக்காத அளவுக்கு மழை பெய்துள்ளது என அவர்களே தெரிவித்தனர். இந்த முறை வானிலை ஆய்வு மையமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பரவலாக மழை பெய்தால் சமாளிக்கலாம். ஆனால், ஒரே இடத்தில் அதிக மழை பெய்தால் சற்று சிரமம். இதனால் அதிக மழை பெய்யவாய்ப்புள்ள பகுதிகள் தொடர்பாகவானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். மேலும்அவசர கால செயல்பாடு மையங்கள் மூலம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் என்னென்ன உதவிகள் தேவை என்பதையும், பாதிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x