வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் அக். 17 வரை கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் இன்று (அக். 13) முதல் வரும் 16-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், வரும் 17, 18-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று (அக்.13) திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.14) விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 15-ம் தேதி செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 16-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 12-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 15 செ.மீ., திருச்சி விமானநிலையத்தில் 13 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் 10 செ.மீ., குளச்சல், நெய்யூரில் 9 செ.மீ., ஈரோடு, வரட்டுப்பள்ளம், இரணியல், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, திற்பரப்பு, தக்கலை, சேலம் மாவட்டம் எடப்பாடி,தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கோவை மாவட்டம் சோலையாறு, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல்வரும் 16-ம் தேதி வரை மணிக்கு35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தம்: தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதி வரை வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. இதனால் தென்மேற்குவங்கக் கடல் பகுதியில் நாளை(அக்.14) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடங்குவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

x