சென்னை: விஜயதசமி நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அதற்கேற்ப தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள், கோயில்களில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆசிரியர் மடியில் குழந்தையை அமர வைத்து 'அ' எழுத்து எழுத வைத்தனர்.
இதுதவிர பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்தனர். அந்தவகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழலையர் மற்றும் 1-ம் வகுப்பில் ஒரே நாளில் 2 ஆயிரம் குழந்தைகள் வரை புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனுடன், சில கோயில்களில் தங்க மோதிரத்தால் குழந்தைகளில் நாவிலும் 'அ' எழுதும் சம்பிரதாயமும் நடைபெற்றது. இதனால் பல்வேறு கோயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.