ஆர்.கே.பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்


திருவள்ளூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரான ஆர்.கே.பேட்டை அருகே பெரிய ராமாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே பெரிய ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பி.ஸ்டான்லி (49). மறைந்த முன்னாள் ராணுவ வீரரான பெருமாளின் மகனான இவர், இந்திய ராணுவத்தில் நாய்ப் சுபேதாராக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக், லே’ பகுதியில் பணிபுரிந்து வந்தார். ஸ்டான்லினுக்கு மேனகா (44) என்ற மனைவி, சுருதிஹா என்ற மகள், அபிஷேக் என்ற மகன் உள்ளனர்.

இந்நிலையில், ஸ்டான்லி, கடந்த 9-ம் தேதி பணியின் போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் உடல் சொந்த ஊரான பெரிய ராமாபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவ்வாறு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ஸ்டான்லியின் உடலுக்கு இன்று காலை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கினார். தொடர்ந்து, ராணுவ உயரதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் ஸ்டான்லியின் உடலுக்கு மலர் வளையம், மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, இன்று மாலை பெரிய ராமாபுரம் பகுதியில் உள்ள கல்லறையில், இந்திய ராணுவத்தின் மதராஸ் படையின் 16-வது பிரிவை சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மூலம் ராணுவ மரியாதையுடன், ராணுவ வீரர்களின் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க ஸ்டான்லியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

x