கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து


சென்னை: மைசூருவில் இருந்து தர்பங்கா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளுவர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

இந்த விபத்தை அடுத்து தடம்புரண்ட பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் தீ பற்றியது. இருப்பினும் இதில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்டமாக சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து செல்லும் ரயில்கள் நிறுத்தம்.

விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. உள்ளூர் மக்கள், பயணிகள், காவல் துறையினர், ரயில்வே போலீஸார் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தேசிய மீட்பு படையினரும் விரைந்துள்ளனர்.

பெரம்பூரில் இருந்து 7.44 மணி அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணி அளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது. சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரயில் வந்துள்ளது. அதன் ஓட்டுநர் ரயில் பாதையில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததை கவனித்து வேகத்தை குறைத்துள்ளார். இருந்தும் சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் மோதி உள்ளது. இரவு நேரம் என்பதாலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லை.

இந்த ரயில் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்கள் வழியாக பிஹார் செல்கிறது. வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இந்த ரயில் புறப்பட்டது. தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள ரயில் பெட்டிகளை அகற்றி பாதையை சீர்படுத்தும் பணியும் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

x