சென்னை காவல் ஆணையர் நேரடியாக பெற்ற 253 புகார்களில் 178 மனுக்களுக்கு உடனடி தீர்வு


சென்னை: சென்னை காவல் ஆணையர் அருண் நேரடியாக பெற்ற 253 புகார்களில் 178 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிவரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொது மக்கள் புகார் அளிக்கலாம். புதன்கிழமைகள் தோறும் காவல் ஆணையர் அருண் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

மற்ற தினங்களில் அவர் சார்பில் வேறு போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மேல் விசாரணைக்காக அனுப்பி வைக்கின்றனர். அதன்மீது நடத்தப்படும் விசாரணையை காவல் ஆணையர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி, காவல் ஆணையர் இதுவரை நேரடியாக பெற்ற 253 மனுக்களில் 178 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 75 மனுக்கள் மீது அந்தந்த காவல் மாவட்டம் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் தகுந்த நடவடிக்கைக்காக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனுக்களின் மீது தீர்வு காணப்பட்ட புகார் மனுதாரர்களை அவர்களது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர்களது புகார் மனுவின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதனை கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உறுதி செய்து கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

x