பூம்புகார் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் தகவல்


மயிலாடுதுறை: பூம்புகார் சுற்றுலா வளாக மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.4 கோடியே 35 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் டேனிஷ் கவர்னர் மாளிகை புனரமைப்பு பணி, ரூ.3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் டேனிஷ் கோட்டை புனரமைப்புப் பணி, ரூ.23 கோடியே 64 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்காழி வட்டம் பூம்புகாரில் மேற்கொள்ளப் பட்டு வரும் சுற்றுலாத் தல மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் இன்று (அக்.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா, எம்எல்ஏ-க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் முன்னாள் எம்.பி செ.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தரங்கம்பாடி, பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடுத்தக்கட்ட திட்ட வரைவு தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து உரிய ஆலோசனைகளை அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். டேனிஷ் கோட்டை புனரமைப்பு பணிக்காக சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை கலந்து அரைத்து சுண்ணாம்பு கலவை தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.

பின்னர் பூம்புகாரில் அமைச்சர் இரா.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: "தரங்கம்பாடி, பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பூம்புகாரின் புனரமைப்பு பணிகள் 65 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. விரைவாக முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும். அடுத்தக்கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன.

தரங்கம்பாடி, பூம்புகார் சுற்றுலா வளாகங்களில் சுற்றுலாவினருக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். தரங்கம்பாடி, பூம்புகாரில் தங்கும் விடுதிகள் கட்டுவது குறித்து அடுத்தக் கட்ட திட்டப்பணியில் சேர்க்கப்படும்" என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.

சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜ கஜேந்திர குமார், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், துணைத் தலைவர் பொன் இராஜேந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கேசவன், சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், தொல்லியல் துறை உதவி பொறியாளர் தினேஷ் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆய்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

x