வயலில் விவசாய வேலை செய்த பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு: சிதம்பரம் அருகே சோகம்


கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வயலில் விவசாய வேலை செய்த பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள கீழத் திருக்கழிப்பாளை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி (58). விவசாயத் தொழிலாளி. இவர் இன்று (அக்10) அதே பகுதியில் உள்ள வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடி இடித்தது இதில் மின்னல் தாக்கி செல்வி மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x