சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், அதற்குள்ளாக சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் எந்தப் பகுதியிலும் வெள்ளத்தடுப்புப் பணிகள் நிறைவடைந்ததாகத் தெரியவில்லை.

நடப்பு ஆண்டில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை அரசு மிகவும் அலட்சியமாக மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் கடந்த செப். 25, 26 ஆகிய தேதிகளில் 7.42 செமீ மழை பெய்ததற்கே பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போலத் தேங்கி நின்றது. அதன்பின் இரு வாரங்களாகியும் வெள்ளத் தடுப்புப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வடகிழக்கு பருவமழையை நினைத்து சென்னை மக்கள் அஞ்சுகின்றனர்.

சென்னையில் வேளச்சேரி, தரமணி, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாபுரம், ஆலப்பாக்கம், திருவிக நகர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

மேலும் கடந்த ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், நடப்பாண்டில் அந்த இடங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க எந்த வகையான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும் அவை இன்னும் முடிக்கப்படவில்லை. இதேநிலை தொடர்ந்தால் சென்னை மாநகர மக்கள் நடப்பாண்டும் பேரிடரையும் பெருந் துயரையும் எதிர்கொள்வதை எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x