சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் இதுவரை ரூ.170.60 கோடி மதிப்பீட்டில் 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.22.69 கோடி மதிப்பீட்டில் 25 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
இதன் சேவை தொடக்க நிகழ்ச்சி, சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், ஜெர்மன் துணைத்தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பேருந்தில் சிறிது தூரம் பயணித்தனர்.
முன்னதாக, மைக்கேலா குச்லர் பேசும்போது, “நான் தொடர்ச்சியாக மாநகரப் பேருந்துகளில் பயணிக்கிறேன். இங்கு பெண்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயண சேவையை, பெண்ணிய பார்வையில் பாராட்டுகிறேன்” என்றார். மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசும்போது, “சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் ரூ.7,492 கோடி மதிப்பீட்டில் 5 கட்டங்களாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,213 பிஎஸ்6 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள், 552 தாழ்தள பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
மேலும், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துக்கான நவீன மென் பொருள் உருவாக்கம், நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வகையில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றன” என்றார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டுக்கான இயக்குநர் உல்ஃப் முத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.