இமானுவேல் சேகரன் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்: நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை


பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர்.

பரமக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசுவிழாவாக கொண்டாட உத்தரவிட்டதையடுத்து, அவரது 100-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார்மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலை வகித்தனர்.

இமானுவேல் சேகரனின் படத்துக்கு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவர்பேசும்போது, "முதல்வர் உத்தரவின்படி ரூ.3 கோடியில் பரமக்குடி நகரில் இமானுவேல் சேகரனின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி இன்னும் 3 மாதங்களில் முடிவடையும்" என்றார்.

தொடர்ந்து, 276 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகள், 346 பயனாளிகளுக்கு தலா ரூ.15ஆயிரம் வீதம் ரூ.51.90 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். பின்னர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மற்றும் நவாஸ்கனி எம்.பி.,எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி, சண்முகையா, இமானுவேல் சேகரனின் மகள் பிரபா ராணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

x