தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் ரூ.48.36 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும்விடுதிகளை வரும் 14-ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோயிலில் ரூ.48.36 கோடியில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் பெருந்திட்ட வளாகம் மற்றும் பல்வேறு திருப்பணிகளை, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைக்கிறார். மேலும், ரூ.5.81 கோடியில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம், அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்கா ஆகிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்நாட்டுகிறார்.
இங்கு 540 பேர் தங்கும் வகையில், நவீன வசதிகளுடன் 20 சிறப்புஅறைகள் மற்றும் 100 தங்கும்அறைகள், உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் முதல்கட்டமாக நடைபெற்று வரும் 21 பணிகள்,இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் 24 பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும். தொடர்ந்து, குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்குவதற்கு முன்பாக ‘யாத்திரி நிவாஸ்’ எனப்படும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இந்த தங்கும் விடுதிக்கான கட்டணம், தனியார் விடுதியைவிட குறைவாக இருக்கும்.
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக கற்கள் கொட்டப்படுகின்றன. கோயில் ராஜகோபுரக் கலசங்களுக்கு தங்கமுலாம் பூச முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத் துறைச் செயலர் பி.சந்தரமோகன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் ரா.சுகுமார், மாவட்ட ஆட்சியர்க.இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்