குரூப்-4 தேர்வில் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு: புதிதாக மேலும் 2,208 காலியிடங்கள் சேர்ப்பு


சென்னை: குரூப்-4 தேர்வில் புதிதாக மேலும்2,208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும்கிராம நிர்வாக அலுவலர், ஃபாரஸ்டர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்தபோட்டித்தேர்வை ஏறத்தாழ 18லட்சம் பேர் எழுதினர். குருப்-4தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன் புதிதாக 480 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக செப்டம்பர் 11-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், காலியிடங்களின் எண்ணிக்கை 6244-லிருந்து 6,724 ஆக அதிகரித்தது. பொதுவாக ஒரு தேர்வில்காலியிடங்கள் அதிகரிக்கும்பட்சத்தில் கட் ஆப் மதிப்பெண் குறையும். அந்த வகையில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் குருப்-4 தேர்வெழுதியவர்கள் குறிப்பாக உத்தேச கட் ஆப் மதிப்பெண்ணை ஒட்டிய நிலையில் உள்ள தேர்வர்கள் மகிழ்ந்தனர். குருப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்வர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி நேற்று ஒருமுக்கிய அறிவிப்பை வெளியிட்டது.அதன்படி, குருப்-4 தேர்வில் புதிதாகமேலும் 2208 காலியிடங்கள் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலியிடங்களின் எண்ணிக்கை 6,724-லிருந்து 8,932ஆக அதிகரித்துள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தனியார் பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

x