கோடியக்கரை மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கையர்கள் அட்டகாசம்


கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களின் வலைகளை இலங்கையை சேர்ந்தவர்கள் அறுத்தும், பறித்துக் கொண்டும் விரட்டியடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சு.அரசப்பன் (எ) முருகேசன் (35) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவர் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு (24), பாண்டியராஜ் (24), அஜீத் (25), சிதம்பரசாமி (55) ஆகிய ஐந்து மீனவர்கள் திங்கட்கிழமை அன்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 14 கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலையை விரித்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த இலங்கைச் சேர்ந்த மர்ம நபர்கள் சுமார் 50 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றனராம். இதே போல, புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த செ.முத்துவேல் (50) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், புஷ்பவனம் மீனவர் காலனி மு.மாதரசன் (26) உள்ளிட்ட 4 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் சென்றனர்.

இவர்கள் நால்வரும் புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு ஒரு படகில் அங்கு வந்த இலங்கை நாட்டவர்கள் இவர்களிடமிருந்த 370 கிலோ மீன்பிடி வலைகளை எடுத்துச் சென்றனராம்.

மீனவர்கள் நேற்று காலை தங்களிடம் மீதம் இருந்த சிறிய அளவிலான வலையுடன் கரைக்கு வந்து சேர்ந்தனர். பின்பு நடந்த சம்பவம் குறித்து மீனவர் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வேதாரண்யம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களுடைய வலை மற்றும் உடைமைகளை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரந்தர தீர்வு கண்டு தமிழக எல்லையில் நமது மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x