“மக்களைத் தேடி நிர்வாகமும் வருகின்றது...” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


ஆவடி: “மக்களைத் தேடி மருத்துவம் மட்டுமல்ல... மக்களைத் தேடி நிர்வாகமும் வருகின்றது” என, இன்று பட்டாபிராமில் நடைபெற்ற வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,200 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: "சென்னை புறநகர் மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா வழங்குவதில் மற்றும் பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்வதில் இருந்து வந்த சிக்கல்களுக்கு தற்போது உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகர் சூழ் பகுதியில் ஆவடி நகர நில அளவை திட்டத்தின் கீழ் 15,942 பட்டாக்கள் உட்பட 17,427 பட்டாக்கள் வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு, வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 வகையான துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதனை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு புள்ளி விவரத்துடன் கூறியுள்ளது.

இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழகத்தில் தான் உள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும், திமுக அரசின் சாதனைகளுக்கு தொடர்ந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு ஐ.நா.சபையின் யு.என்.ஐ.டி.எஃப் என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் மட்டுமல்ல... மக்களைத் தேடி நிர்வாகமும் வருகின்றது" என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

இவ்விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலர் அமுதா, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இன்று காலை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 1,200 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இவ்விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x