குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் பெய்த கன மழையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழை நீர் புகுந்து பள்ளி செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் பர்லியார் பகுதியில் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீரும் சகதியும் பள்ளிக்குள் புகுந்தது. இதனால் ஆசிரியர்கள் இன்று பணிக்கு வந்திருந்தும் பள்ளி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றதால் வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவ - மாணவியர் வகுப்பறைகளுக்குள் செல்ல முடியாமல் காத்திருந்தனர். மலைப் பாதையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகளவில் மண் ஜேசிபி மூலமாக எடுத்துக் கொட்டப்பட்டதே பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.