தமிழகத்திலும், புதுவையிலும் பொம்மை முதல்வர்கள்; மக்களைப் பற்றி கவலை கிடையாது - சொரத்தூர் ராஜேந்திரன்


புதுச்சேரி: சுகாதாரமற்ற குடி தண்ணீரை விநியோகிக்கும் புதுச்சேரி அரசை கண்டித்தும், பொதுமக்களுக்கு சுகாதாரமான குடி தண்ணீரை விநியோகம் செய்ய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உப்பளம் சுப்பையா சாலை வாட்டர் டேங்க் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வசித்தார். இதில், புதுச்சேரி மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பாஸ்கர், ராஜா ராமன், கோமளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சொரத்தூர் ராஜேந்திரன், "புதுச்சேரியில் கூட்டணியில் உள்ள பாஜக, மறைமுக கூட்டணியில் இருக்கும் திமுக என யாராக வேண்டுமானாலும் இருங்கள். இங்கு சட்டப்பேரவையில் அதிமுக பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் கூட, பொதுவெளியில் உங்களை தட்டிக்கேட்கும் தைரியம் அதிமுகவுக்கு இருக்கிறது. புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட இத்தனை கோடி, ஆளுநர் மாளிகை கட்ட இத்தனை கோடி எனச் சொல்கின்றனர்.

நாட்டு மக்கள், ஏழைகள், இல்லாதவர்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை முதலில் அரசு கவனிக்க வேண்டும். அவர்களின் சுகாதாரத்துக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதிமுகவில் இருந்த போது உண்டுகொழுத்தவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரைத்தான் கரூரில் பொதுக்கூட்டம் போட்டு அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த, இன்றைக்கு பொம்மை முதல்வராக இருக்கின்ற ஸ்டாலின், அவர் எப்படிப்பட்ட ஆள் என்பதை தோலுரித்துக் காட்டினார்.

ஆனால், செந்தில் பாலாஜி நம்மிடம் இருக்கும்போது கருப்பாக இருந்தாராம். இன்றைக்கு திமுகவுக்கு சென்ற பிறகு அவர் காந்தியாகவும், சிவப்பாகவும் ஆகிவிட்டாராம். ஒரு வருடத்துக்கு மேலாக லஞ்ச லாவண்ய வழக்கில் சிறையில் இருந்த ஒருவருக்கு மாலை மரியாதையோடும், வாழ்த்துகளோடும் மீண்டும் அதே அமைச்சர் பதவியை கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.

நாடும், நாட்டு மக்களும் எப்படிப் போனால் என்ன, தானும் தனது குடும்பமும் வாழ வேண்டும் என்று எப்படி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைத்தாரோ அதே அடிப்படையில் தன்னுடைய குடும்பத்தை வளர்ப்பதில் பொம்மை முதல்வர் ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய மகனை துணை முதல்வராக்கி தங்கையை நாடாளுமன்றக் குழு தலைவராக நியமித்திருக்கிறார்.

தன்னுடைய குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் ஒரு முதல்வர் உள்ளார். புதுச்சேரியில் எல்லா கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கின்ற முதல்வர் இருக்கிறார். இவர்கள் யாருக்கும் நாட்டு மக்களைப் பற்றி கவலை கிடையாது. தமிழகத்தில் அறிஞர் அண்ணாவுக்கு பிறகு அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சி கட்டிலில் இருந்தது. தாய்மார்களுக்கு எல்லாமும் தந்தார்கள். குழந்தைகளை குளிப்பாட்டி, சீராட்டி பள்ளிக்கு அனுப்புவது மட்டும் தான் அவர்களின் வேலை.

அவர்களுக்கு அனைத்தும் தந்தது ஜெயலலிதா. அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்துக்கு தந்தார். புதுச்சேரி மாநிலத்தின் மீதும் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் கண்டிப்பாக வரும். அந்த நேரத்தில் எல்லாமும் உங்களுக்கு கிடைக்கும்" என்று கூறினார்.

x