போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: சாம்சங் பணியாளர்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேண்டுகோள்


சென்னை / காஞ்சி: சாம்சங் நிறுவன பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், சிஐடியு தொழிற்சங்க பதிவு தொடர்பாக வழக்கு முடிவுக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்றுஅமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் தொடர்வது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இவற்றுக்கு பதிலளித்து, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:

சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்சினையில் தமிழக முதல்வர் முழு கவனம் செலுத்தி வருகிறார். தொழிலாளர் துறை சார்பில் 7 முறை தொழிலாளர்களுடன் பேசப்பட்டது. இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இப்போராட்டத்துக்கு உடனடியாக தீ்ர்வு காண முதல்வர் கூறியதன் அடிப்படையில், 3 அமைச்சர்கள் சேர்ந்து, 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

முதலில் நிறுவனத்துடன், அதன்பின் சிஐடியு மற்றும் அது சார்ந்தவர்களிடம் பேசி கருத்துகளை பெற்றோம்.அதன்பின், நிறுவனத்தினரிடம் பேசி, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் பேசினோம். 500 பேர்இன்னும் பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் தரப்பு பிரச்சினைகளை முன்வைத்தனர். இந்தபோராட்டத்தால் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சிஐடியு சங்கத்தை பதிவுசெய்ய வேண்டும் என்பதேபோராட்டத்தில் ஈடுபடுபவர்களின் முக்கியகோரிக்கையாக உள்ளது. மீதமுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்ததும் நடவடிக்கை எடுக்கலாம்.

மற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை கருதி, அவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து சாம்சங் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x