சென்னை: ‘தேச நலனுக்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்க வேண்டும்’ என இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் வலியுறுத்தினார்.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவு விழா மற்றும் இந்திய விமானப்படை தினவிழா, சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், முப்படைகளின் தளபதி அனில் சவுகான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், அவர் பேசியதாவது:
நாம் கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து எதிர்கால தேவைக்கான சவால்களைச் சந்திக்க தயாராக வேண்டும். தேசநலனுக்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்க வேண்டும்.
சர்வதேச அளவில் பாதுகாப்பு சூழல் தற்போது நிலையற்ற தன்மையில் உள்ளது. அதேநேரம், போர்பதற்றம் உள்ளிட்டவற்றை சமாளிக்கும் அளவுக்கு இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தளவாட உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரை ஊக்கப்படுத்தி வருகிறது.
வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெறும் இடங்களில் மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய விமானப்படை செய்து வருகிறது. இவ்வாறு அமர் ப்ரீத் சிங் கூறினார்.
அதைத் தொடர்ந்து, விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சாரங் மற்றும் பிரசாந்த் ஹெலிகாப்டர்கள், ரஃபேல் மற்றும் சூர்யகிரண் போர் விமானம் ஆகியவை சாகசங்களை நிகழ்த்திக் காட்டின. இதை விமானப் படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். மேலும், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விமானப் படை பயிற்சி பிரிவு தளபதி ஏர்மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப் படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏர்மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப்படை தளபதி ரதீஷ்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற பயிற்சி அணிவகுப்பின்போது வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல் 3 விமானப்படை வீரர்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.