துணை முதல்வரான பின்னர் பணியை மறந்த உதயநிதி: ஹெச்.ராஜா விமர்சனம்


திருச்சி: பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்சி கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். விளையாட்டுமற்றும் திறன் மேம்பாட்டுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, இளைஞரணி மாநிலப் பொதுச் செயலாளர் கவுதம் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு திமுக அரசால் குடிநீர் கூட வழங்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, கார் பந்தயத்துக்கு முன்னின்று ஏற்பாடு செய்தார். ஆனால், அவர் துணை முதல்வரான பின்னர் தனது பணியை மறந்துவிட்டார்.

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். தமிழகஅரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு, மத்திய அரசை குறைசொல்வதை ஏற்க முடியாது.ஆர்எஸ்எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

x