சிதம்பரத்தில் தீட்சிதர்கள் கைது செய்யக் கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் மேல வீதி பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்: தீட்சிதர்களை கைது செய்ய கோரி சிதம்பரத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை சகஜானந்தா தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் இளையராஜா (40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இளையராஜா அக்.7-ம் தேதி இரவு நடராஜர் கோவிலில் உள்ள கீழ சன்னதி வழியில் சென்றபோது, அங்கு ஆயிரங்கால் மண்டபம் அருகே நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த இளையராஜா அதை தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது இதை பார்த்த தீட்சிதர்கள் இளையராஜாவிடம் ஏன் வீடியோ எடுக்கிறாய் அதை உடனே அழிக்க வேண்டும், இல்லை என்றால் உனது செல்போனை உடைத்து விடுவேன் என்று கூறி, இளையராஜாவின் கையைப் பிடித்து முறுக்கி தாக்கி செல்போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இளையராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகார் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. போலீஸார் அடையாளம் தெரியாத 5 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அக்.8-ம் தேதி மதியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அக்.8-ம் தேதி மாலை சிதம்பரம் மேல வீதி பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா, திக மாவட்ட தலைவர் பூசி இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் மாவட்ட செயலாளர் பால அறவாழி, நகர செயலாளர்கள் ஆதிமூம், பாவணன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள், காங்கிராஸ், திக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீட்சிதர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸாரை கண்டித்தும், தீட்சிதர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

x