நீலகிரியில் மனிதர்கள் - வன விலங்குகள் மோதலை தவிர்க்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்!


உதகை: நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் - வன விலங்குகள் மோதலை தவிர்க்கும் வகையில் விரைவில் இலவச எண் அறிமுகப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும், விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இவ்விழா ஒரு வார காலம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வனத்துறை சார்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இப்பேரணி சேரிங்கிராஸ் பகுதி வரை நடைபெற்றது. இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கலந்துகொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் - வனவிலங்குகள் மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறித்து அறிவிப்பதற்காக மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை விரைவில் தொடங்கப்பட்டு பொதுமக்கள் தகவல்களை பெறுவதற்கான இலவச தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்படும்" என்று ஆட்சியர் கூறினார்.

x