கும்பகோணத்தில் 44 குளங்கள், 11 கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்: அக்.20-ல் நிறைவடையும் என தகவல்


கும்பகோணம்: கும்பகோணம் மேலக்காவிரியில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் குளத்தின் கரையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 4 வீடுகளை அறநிலையத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இன்று அகற்றினர்.

மேலக்காவிரியில், சாரங்கபாணி கோயில் நிர்வாகத்திற்குட்டப்பட், மிகவும் பழமையான படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக் கோயிலின் குளக் கரையில் பல ஆண்டுகளாக 4 வீடுகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, மதுரை நீதிமன்றம் உத்தரவின்படி, இன்று அந்த வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு குளத்தின் எல்லையை வரையறை செய்து, குளத்தைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், 'கும்பகோணத்தில் 44 குளங்கள், 11 கால் வாய்கள் இருந்தன. இதில், பல குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ''தயவுதாட்சண்யமின்றி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்'' என 2018-ல் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் முறையாக அமல்படுத்தவில்லை. இதையடுத்து யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், ''கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை முழுமையாக கணக்கெடுத்து, குளங்கள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்துக்குள் அகற்றி, அதுதொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை ஆக்கிரமிப்புகள் மீண்டும் களையெடுக்கப்படா விட்டால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அக்.28-ல் நேரில் ஆஜராக வேண்டும்'' என நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி, அங்குள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவிற்கு 20 நாட்கள் உள்ள நிலையில், இன்று வரை சுமார் 60 சதவீத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 சதவீத ஆக்கிரமிப்புகள் வரும் 20-ம் தேதிக்குள் அகற்றப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

x