மாங்காடு அருகே விபரீதம்: கிண்டல் செய்த வட மாநில தொழிலாளி இரும்பு ராடால் அடித்துக் கொலை


பூந்தமல்லி: மாங்காடு அருகே செல்போனை ஒளித்துவைத்துவிட்டு கிண்டல் செய்த வடமாநில தொழிலாளி இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, பரணிபுத்தூர், லீலாவதி நகர் பகுதியில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான மரம் அறுக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் பாண்டே (43), தினேஷ் திரிபாதி (38) ஆகிய இருவர் தங்கி கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இங்கு 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்த குமார் (48), அனில் பாண்டே உள்ளிட்டோருடன் ஒன்றாக தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அனில் பாண்டேவும், தினேஷ் திரிபாதியும், குமாரின் செல்போனை எடுத்து ஒளித்துவைத்துவிட்டு, அவரை ஆத்திரமூட்டும் வகையில் கிண்டல் செய்து, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் செல்போனை கேட்டு நச்சரித்துள்ளார்.

இதையடுத்து அனில் பாண்டே நீண்ட நேரம் கழித்து குமாரின் செல்போனை எடுத்துக் கொடுத்துள்ளார். இதனால் அனில் பாண்டே மீது கடுமையான கோபத்தில் இருந்த குமார், இன்று அதிகாலை 2 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த அனில் பாண்டேவின் தலையில் இரும்பு ராடால் அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த அனில் பாண்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த மாங்காடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொலை செய்யப்பட்டுக் கிடந்த அனில் பாண்டேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று காலையில் குமாரை கைது செய்தனர்.

x