மெரினா வளைவு சாலையில் மீன் வியாபாரம் செய்வதற்கு தடை: நவீன மீன் அங்காடியில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு


மெரினா வளைவு சாலையில் சாலையோரம் இயங்கி வந்த மீன் கடைகளை இயந்திரம் மூலம் அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள். | படங்கள்: ச.கார்த்திகேயன் |

சென்னை: மெரினா வளைவு சாலையில் மாநகராட்சி சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் சாலையோர மீன் வியாபாரிகளுக்கு கடைஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த சாலையில் மீன் விற்பனைக்குத் தடை விதித்து, சாலையோர கடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி நேற்று தொடங்கியது.

சென்னை மெரினா வளைவு சாலை மீனவர்கள் வசிக்கும் பகுதி என்பதால், அவர்கள் பிடித்த மீன்களை அதே சாலையில் விற்பனைசெய்து வருகின்றனர். மீன்களை வெட்டும்போது உருவாகும் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலையைஆக்கிரமித்து கடைகளை திறப்பதாக புகார்கள் எழுந்தன. இதில்சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, கடைகளை முறைப்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து இப்பகுதி மீன் வியாபாரிகளுக்கென மாநகராட்சி சார்பில் ரூ.15 கோடியில் 366கடைகள் கொண்ட நவீன மீன்அங்காடி, மெரினா வளைவு சாலையில் உள்ள நொச்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களைச் சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதிகள், இவ்வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரைச் சுத்திகரித்த பின் வெளியேற்றும் வகையில். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அப்பகுதியில் வியாபாரம் செய்ய தடை விதித்து,
மாநகராட்சி வைத்துள்ள எச்சரிக்கை பலகை.

நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இதன்தொடர்ச்சியாக கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்புகடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால்,அவர்கள் சாலையோரமே விற்பனையைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், சாலையோரம் கடை வைத்திருந்தவர்களை நவீன அங்காடியில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் விற்பனையைத் தொடங்குமாறு நேற்றுமாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி, சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து, மீன் வியாபாரிகள் தங்கள் உடைமைகளை நவீன அங்காடிக்குள் எடுத்துச் சென்று வைக்கத் தொடங்கினர்.

மீனவர்கள் சாலையோரம் விட்டுச் சென்ற கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக மெரினா வளைவு சாலையை, வியாபாரம் செய்யத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அது குறித்த விவரங்கள் அடங்கிய பதாகைகளை நிறுவி வருகின்றனர். ஓரிரு நாட்களுக்குள் சாலையோரம் உள்ள அனைத்து மீன் விற்பனை கடைகளும் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

x